<$BlogRSDUrl$>

Monday, June 07, 2004

கட்டுரைத் தமிழ் நடை

சிறுகதை, கவிதை, உரைவீச்சு, கட்டுரை ஆகிய நான்கு வெளிப்பாட்டு வடிவங்களே தமிழ் இதழ்களில் உண்டு. இவற்றுள் கட்டுரையே முதன்மை பெறுகின்றது. உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் கட்டுரையே ஆகும்.

கா. சிவத்தம்பி அவர்கள் கட்டுரை "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். க. சொக்கலிங்கம் அவர்கள் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்க்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.

கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் "கட்டுரை கோவை" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் "தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்" (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும். கட்டுரை எப்படி எழுதுதல் என்று விளக்குதல் எனது நோக்கமன்று (ஆரம்ப எழுத்தாளர்களுக்குரிய கட்டுரை பற்றிய திருப்பூர் கிருஸ்ணன்னின் படிமுறைகள் இச் சுட்டியில் கிடைக்கும்). கட்டுரை நடைக்குரிய ஒரு கோட்பாடு தேடலே இக் கட்டுரை. குறிப்பாக, தமிழில் எழுதும்பொழுது எழும் சில நடை சிக்கல்களுக்கான விளக்கம் தேடலே இக் கட்டுரையின் நோக்கம்.

கா. சிவத்தம்பி அவர்கள் "நடை" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார்.
1. சொல் தெரிவு
2. சொல்லும் திறன், உத்தி
3. அணிகள் (சொல் அணிகள்)
4. வாக்கியங்கள் அளவு, அமைவு முறைமை
மேலும், "நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்", அது "எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது" என்கிறார்.

இன்று தமிழில் கட்டுரை எழுதும்பொழுது நடை பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. கீழே, சில சந்தேகங்களும் அவை நோக்கிய எனது கோட்பாடுகளும்.

உரைநடை, கட்டுரை நடை, நுண்ணிய கட்டுரை நடை வேறுபாடுகள்
பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியம், தத்துவம் படைக்க பெருதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20 நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பன்பட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரையின் முக்கிய வடிவம் ஆகும்.

கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தர்க்க கட்டுரை (Argumentative Essay)
2. செய்தி கட்டுரை (Article)
3. விபரணக் கட்டுரை (Descriptive Essay)
4. பகுத்தாய்வு கட்டுரை (Analytical Essay)
5. செயல்முறை விளக்க கட்டுரை (Process Analysis Essay)
6. ஒத்தன்மை விளக்க கட்டுரை (Analogy Based Essay)
7. எடுத்துரைத்தல் கட்டுரை (Narrative Essay)
8. வகைப்படுத்தல் கட்டுரை (Classification Essay)
9. ஒப்பீட்டு கட்டுரை (Comparison and Contrast Essay)

ஆயினும், "ஆங்கிலத்தில் "essay, article, feature writing" என நுண்ணியதாக வேறுபடுத்துவன்வற்றைத் தமிழில் இன்னும் வேறுபடுத்திச் சுட்டுவதில்லை" என்று கா. சிவத்தம்பி சுட்டிகாட்டுகின்ற்றார். தேவைக்கேற்ற நடையை உபயோகிப்பதும், அவ் நடையையே நுண்ணிய வேறுபாடுகளை காட்ட விடுபதுவே எனது கோட்பாடு.

பொதுவாக தர்க்க கட்டுரைகளே தமிழில் முக்கியம் பெறுகின்றன. தர்க்க கட்டுரைகள் தனது வாதங்களை (premises) முன் வைத்து, வாதங்களால் நிலைநிறுத்ப்படும் முடிவுகளுக்கு (conclusions) இட்டு செல்லும். ஒரு செய்தி கட்டுரை (article) செய்தி பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளான 'என்ன? எங்கே? எப்பொழுது? ஏன்? யார்?' என்பவற்றிற்க்கு உடனடியாக பதில் தர முயலும். விஞ்ஞான விடயங்களை பகிர முனையும் ஆய்வு கட்டுரைகள் விபரண, தர்க்க, செயல்முறை நடைகளை தகுந்தவாறு பயன்படுத்தி விடயங்களை முன்நிறுத்தும்.

பேச்சு தமிழ் நடை எதிர் கட்டுரை தமிழ் நடை
பேச்சு தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. பேச்சு தமிழ் பாமரர் தன்மை ("lowstatus") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை ("high status") உடையதாகவும் கருதுவோரும் உளர்; சான்றுக்கு இச் சுட்டி.

கட்டுரைக்கு என்றும் கருத்துச் சொறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்ப்பட்ட (edited), ஒழுங்கமைக்ப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சு தமிழ் போல எழுத வேண்டும் என்ற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும், பேச்சு தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகபடுத்தல் மூலம் அதன் எளிமையையும், எழுத்து தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரை பெற்று கொள்ளும்.

பிரதேச தமிழ் நடை எதிர் கட்டுரை தமிழ் நடை
தமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்க்கு பலமும் பலவீனமும். ஒவொரு பிரதேச தமிழ்ர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களை (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களை குழப்பி விடுகின்றது. எடுத்துக்காட்டாக "தமிழ்நாட்டுத்தமிழ், இலங்கைத்தமிழ், சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ் இப்படி பலப்பல தமிழ் எனக்கு புரிந்தாலும் சத்தியமாக எனக்கு இந்த சென்னைத்தமிழ் மட்டும் புரியவில்லை" என்கிறார் கரிகாலன்.

இலக்கிய நயத்திற்காக கதைகளிலோ கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையை பயன்படுத்தலாம், ஆனால் தகவல்களை தரும் கட்டுரைகளில் (வலைப்பூ கட்டுரைகளிலும்) சீரிய கட்டுரை தமிழ் பயன்படுத்தினால்தான் பன்முக தமிழரும் புரிந்து கொள்ளலாம்,

தமிங்கிலிஸ் நடை எதிர் கட்டுரை தமிழ் நடை
வெங்கட் அவர்கள் ஆங்கில ஆதிக்கமின்றி எப்படி எழுதலாம் என்று நன்கு விளக்கியுள்ளார்; சுட்டி 1, சுட்டி 2. மேலதிக தகவல்களை ஆறாந்திணையில் உள்ள ராதா செல்லப்பனின் "அறிவியல்-தொழிலியல்: தமிழாக்க முறைகள்" கட்டுரை தொடர் மூலம் அறியலாம்.

இறுதியாக, கட்டுரைத் தமிழ் நடை என்ற பொருளை பல கோணங்களில் இருந்து விளக்கினேன்.

மேலும் விபரங்களுக்கு:
1. நூல்: உரைநடை வரலாறு. வி.செல்வநாயகம்
2. நூல்: கட்டுரை கோவை. க.சொக்கலிங்கம்
3. சுட்டி: கட்டுரை 2004
4. சுட்டி: காசியின் கருத்துக்கள்

(அடுத்த பதிப்பு -June/??/2004 )

Friday, May 28, 2004

தமிழ் இதழ்களும் சமூக பிரதிபலிப்பும்

தமிழம்.வலை ஆசிரியர் பொள்ளாச்சி நசன் தமது இதழில் தர கூடிய விடயங்கள் பற்றி அவருடைய மடல் ஒன்றில் பொது கருத்து கேட்டுருந்தார். அவருடைய தமிழ் இதழ்கள் சேகரிப்பும் ஈடுபாடும் காரணமாக அவரிடம் தமிழ் இதழ்கள் பற்றி நிறைய விடயங்கள் உண்டு. அவற்றை மேலும் பகிர வேண்டும். உதாரணமாக:

1. தமிழ் இதழ்கள் வரலாற்று தகவல்கள் (எவ் இதழ் தமிழில் முதலில் வந்தது? எவ் இதழ் கூடிய ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தது (வெளிவந்துகொண்டிருக்கின்றது)? ...)

2. தமிழ் இதழ்களில் அலசப்படும் விடயங்கள் பற்றிய குறிப்புரைகள்.

3. இந்திய, இலங்கை தமிழ் இதழ்கள் பற்றிய ஒப்பீடுகள்.

4. சிறு சஞ்சிகைகள், வர்த்தக சஞ்சிகைகளுக்கு மிடையே உள்ள தொடர்பு, வித்தியாசம், போட்டி பற்றிய பார்வைகள்.

5. தமிழ் இதழ்கள் எதிர்காலம்.

6. இணைய உலகில் தமிழ் அச்சு இதழ்களின் எதிர்காலம்.

அவருக்கு நேரம் இருப்பின், தமிழ் இதழ்களை உபயோகித்து, தமிழ் சமூகம் பற்றி ஆராயலாம். ஒரு சமூகத்தின் படைப்புக்களில் இருந்து அச் சமூகத்தின் தன்மையும் பலமும் வெளிப்படும். விஞ்ஞான அமெரிக்கன் (Scientific American), அற்லான்ரிக் மாத இதழ் ( Atlantic Monthly) மூலம் அமெரிக்காவின் விஞ்ஞான, பகுத்தறிவு கட்டமைப்பு வெளிப்படுகின்றது. அதே போல், தமிழ் இதழ்கள் தமிழ் சமூகத்தின் தன்மையையும், பலத்தையும் வெளிப்படுத்தும். தமிழ் இதழ்களை ஆராய்வதன் மூலம், தமிழ் சமூகத்தின் பல கூறுகளை விளங்கி கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக:

தமிழ் சமூகத்தின் பேச்சு/வெளிப்பாட்டு சுதந்திரத்தை இதழ்களில் படைப்பாளர்கள் நேரடியாக சொல்ல எடுக்கா விடயங்கள், முடியா விடயங்கள் மூலம் சற்று மதிப்பிடலாம்.

கால அடிப்படையில் படைப்பாளர்களின் கருத்து மாற்றங்ககளை கொண்டு, தமிழ் சமூகத்தின் போக்கை மதிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, 1990 வரையில் தமிழ் படைப்பாளர்கள் பலரிடம் பொது உடமை (communist) சிந்தனைகளே வலுவுற்றிருந்தன, அதன் பின்னர் பொது சந்தை (free market) சிந்தனைகளே வலுப்பெறுகின்றன. இது தமிழ் சமூகம் உலக மயமாக்கலையும், முதலாளித்துவ பொருளாதார (free market or capitalist) கட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ள முனைவதையே காட்டுகின்றது.

மேலும் இதழ்களில் படைப்பாளர்கள் நேரடியாக சொல்லும் சமூகம் நோக்கிய கருத்துக்களையும் ஆராயலாம். இப்படி, பல நிலைகளில் இதழ்களை உபயோகித்து சமூகத்தை ஆராயலாம். இதற்கு பொள்ளாச்சி நசன் போன்ற ஆழ்ந்த தமிழ் இதழ், தமிழ், சமூக அறிவுடையோர் சால சிறந்தவர்கள்.


உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் இதழ் மின் மஞ்சரி இணையத்தில் வெளிவந்துள்ளது. அதை பற்றிய பதிவுகள் மேலும் வரும்.

(அடுத்த பதிப்பு-June/04/2004)

Thursday, May 20, 2004

இனுக்ரிருற் மொழிகனடாவின் இனுக்ரிருற் (Inuktitut) மொழி பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற். நுனுவற்றில் வாழும் 20 000 மக்களால் இம் மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாண்டிலும் (Greenland) 40 000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.

இனுக்ரிருற் மொழி பற்றி அறிய சில சுட்டிகள்:
http://north.cbc.ca/north/archive/language/
http://www.nunavut.com/nunavut99/english/our.html
http://www.halfmoon.org/inuit.html

இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் ஒரு மூத்த குடிமக்களின் மொழி. 1894 இல் தான் எழுத்துருவம் கொண்ட மொழி. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி. இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம் மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள எடுக்கும் அக்கறை உச்சம், முயற்ச்சிகள் பல பல.

1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. சமீபத்தில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது (www.livingdictionary.com/).

இனுக்ரிருற் இதழ்(tapirisat.ca/english/inuit_canada/magazine) இம்மொழியின் முக்கிய இதழ். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம், மற்றும் பிரேஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது. இவ் இதழின் முந்தைய இதழ்களை படித்து பாருங்கள், அவர்களின் உலகுக்கு சென்று வாருங்கள்.

(அடுத்த பதிப்பு-May/28/04)

Friday, May 14, 2004

நுட்பம்
தமிழில் ஓர் அறிவியல் இணைய சஞ்சிகை


"தமிழில் ஓர் அறிவியல் சஞ்சிகைக்கான இடம் இன்றும் வெற்றிடமாகவே உள்ளது. இத் தேவையை உணர்ந்து, அதை இயன்றளவு பூர்த்திசெய்யும் நோக்குடன், நுட்பம் மீண்டும் உயிர்பெறுகிறது." என்று அறிவித்து 08/05/2004 மீண்டும் மலர்ந்திருக்கின்றது நுட்பம்.

இலகுவில் பரிந்துரைக்கலாம், விமர்சிக்கலாம் ஆனால் செயலில் செய்வதே திறமை. தமிழைப் பற்றி அலட்டாமல் தமிழில் நுட்பம் சொல்லும் தன்மை நன்று. கருத்தாளத்தில், வடிமைப்பில், நோக்கில் மிகவும் சிறப்புடன் மலர்ந்திருக்கின்றது நுட்பம்.

நுட்பம் மேலும் சிறக்க, சில கருத்துக்கள்:

1. கட்டுரையாளர்(கள்) பற்றிய தகவல்களை, விஞ்ஞான அமெரிக்கன் (Scientific American) போன்று விரிவாக இணைக்கப்பட்டால் நன்று.

2. இணைய தொடுப்புக்களை, நேரடி தொடுப்புக்களாக (hyperlinks) மாற்றினால் நன்று.

3. உதவி நூல்கள், உதவிய வலைப்பக்க தொடுப்புகள் பற்றிய தகவல்களை தருகிறீர்கள், ஆனால், விரிவாக, முறையாக அத்தகவல்களை தந்தால் நன்று.

4. "ஆழமான பார்வையில்" படைப்புக்களை மேலும் வரவேற்கின்றோம்.

5. "www.kurzweilai.net" உள்ள கட்டுரைகள் போல், முக்கிய சொற்களை, சிந்தனைகளை சிறப்பாக (bold) காட்டினால் நன்று.

6. நீண்ட வரி (full screen) அல்லாமல், திசைகள் போல (half screen) கட்டுரைப்பந்திகளை அமைத்தால் நன்று.

இவை வெறும் ஆலோசனைகளே, தங்களின் நிர்ப்பந்தங்களை அறியாமல் தரப்பட்டவை.

நுட்பம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

(அடுத்த பதிப்பு - May/21/2004)

Friday, May 07, 2004

தமிழை ஆய்வு மொழியாக்க சில தீர்வுகள்

தமிழுக்கு ஆய்வு திறன் இல்லை போன்றே கடந்த பதிப்பில் எழுதினேன். ஆய்வு திறன் இல்லாத மொழி சிந்தனையை கட்டுப்படுத்தும். மொழி சிந்தனையையும், சிந்தனை காலாச்சாரத்தையும் கட்டமைப்பதால், தமிழை இயற்கை இறப்புக்கு விடுவதே தமிழரின் பொருளாதார, அறிவியல், அரசியல் நலன்களுக்கு நன்று என்றும் சீண்டினேன்.

ஆனால், மொழி சிந்தனையை எந்தளவில் கட்டுப்படுத்துகின்றது? பின்வரும் கூற்றுக்களை நோக்குக.

சிந்தனை மொழிரீதியாக மட்டுமின்றி, நாம் உருவாக்கும் பொருட்கள், கருவிகள், கலைகள் (இசை, ஓவியம், நடனம்), எமது உணர்ச்சிகள் என பல வழிகளில் வெளிப்படும். ஆகையால், தமிழ் சிந்தனையை எந்தளவு கட்டுப்படுத்துகின்றது என்பது கேள்வியே.

பல மொழிகளுக்குள் வித்தியாசங்கள் உண்டு, ஆயினும் அவ் வித்தியாங்களை நிவர்த்தி செய்யலாம். மேலும், அனைத்து மொழிகளுக்கும் ஒரு பொது அடிப்படை கட்டமைப்பு உண்டு என்ற கருத்து தற் சமயம் வலுப் பெற்று வருகின்றது.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் மனித சிந்தனையை மொழி, இனம், சமயம், சாதி போன்றவை கட்டுப்படுத்த முடியாது. ஆயினும், பல நூற்றாண்டுகளாக மனிதன் குழு நிலையில் வாழ்ந்து செயற்ப்பட்டு வருகின்றான், அந் நிலையில் குழுவின் மொழி அக்குழுவின் வளர்ச்சிக்கும், செய்ற்பாட்டிற்க்கும் முக்கியம்.

மேற் கூற்றுக்களை கருத்தில்கொள்கையில், தமிழை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதே, தமிழ் அன்பர்கள், மற்றும் தனி தமிழ் மக்களுக்கும் வலு சேர்க்கும். மேலும், மனிதன் பொருளாதார பிராணி மட்டுமன்று. அவன் வரலாற்று, சமூக, ஆத்மீக பிராணி. தமிழ், தமிழரின் பன்முக தேடல்களுக்கு உதவும்.

மீண்டும், "தமிழுக்கு ஆய்வு திறன் இல்லை" என்ற விவாதம் மேலோட்டமானது.

 • தமிழில் மெஞ்ஞானம் (திருமந்திரம், திருமுறைகள்), கலைகள் (கர்நாடக இசை, பரத நாட்டியம்), இலக்கணம் (தொல்காப்பியம், நன்னூல்) ஆகிய துறைகள் ஆழமாக அராயப்பட்டுள்ளது, அதற்க்கு தமிழ் பயன்பட்டது.


 • விஞ்ஞான பாடங்களாகிய கணக்கியல், மருத்துவம், வானியல், இயற்கை விஞ்ஞானம் ஆகியவை தொன்று தொட்டே (சித்தர்கள் போன்றோரால்) தமிழில் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது.


 • இன்று தமிழ் கணனியியலில் திறன் படவே செயல்லாற்றுகின்றது.


 • ஆகவே, தமிழுக்கு ஆய்வு திறன் உண்டு. ஆனல், அத்திறன், பன்மடங்கு வளர்ச்சி பெற வேண்டும். தமிழுக்கு ஆய்வு திறன் வளர சில வழிமுறைகள்:
  1. பல காலமாக தொடரும், இன்றும் தொடரப்பட வேண்டிய செயற்ப்பாடு கலைச்சொல் உருவாக்கம், தரப்படுத்தல், பாவித்தல் ஆகும்.


  2. தமிழில் முன் மாதிரி படைப்புக்கள் வேண்டும். கணனியியல் பற்றி பலர் எழுதுவதற்க்கு "தமிழ் கம்பியூட்டர்" போன்ற இதழ்களே உந்து சக்தியாக இருந்தன. இலத்திரனியல் பற்றி ஒரு இதழ் முன் மாதிரியாக வந்திருந்தால், பல படைப்புக்கள் அத்துறையில் பின் தொடர்ந்திருக்கும். இந் நோக்கில் www.thozhilnutpam.com, ஒரு நல்ல முயற்ச்சி.


  3. தகுந்த கருவிகள்/செயலிகள் செய்தல் வேண்டும். தமிழிற்க்காகவே தேவை உண்ர்ந்து, தரமுடன், தக்க தருணத்தில் உருவாக்கப்படும் செயலிகள் தமிழிற்க்கு வலு சேற்க்கும். உதாரணமாக, "சுரதா செயலிகள்" தமிழ் கணனியியலில் ஒரு புரட்ச்சி செய்கின்றது.


  4. தமிழ் கிரந்த எழுத்துக்களை (அழகு படுத்தி) விரிவு செய்தல் வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து சொற்களை ஒலி நயத்துடன் தமிழில் எழுத வழி செய்தால் நன்று.


  5. தமிழில் தெளிவாக (without ambiguity) தகவல் பரிமாறுவதற்க்கு, ஒரு தருக்க (logical subset language) மொழி நடை, தமிழுக்குரிய குறியீடுகள், சொல்லாட்சிகளுடன் கட்டமைத்தால் நன்று.


  6. தமிழில் செய்யுள், உரைநடை முறையே வளர்ந்தன, இன்று, தெளிவாக, தர்க்க ரீதியாக, அதே வேளை இயல்பாகவும், எளிமையாகவும் செறிவான தர்க்கங்களை, கருத்துகளை, செய்திகளை, திட்டங்களை, செயல்முறைகளை பரிமாற விஞ்ஞான உரைநடை வளர வேண்டும்.
  இக் கருத்துக்களுக்கமைய, பொற்கோ கூறுகையில் "அறிவியல் மொழிநடையில் செய்திவெளிப்பாட்டுக் கூறுகளே மிகுதியாக இடம் பெற வேன்டும் என்பதையும் உணர்ச்சிக் கூறுகளுக்கும் மனப்பான்மைக் கூறுகளுக்கும் அறிவியல் மொழிநடையில் மிகக் குறைந்த இடமே அமைய முடியும் என்பதையும் இங்கே நாம் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடவேன்டும்." என்கிறார்.

  மேலும், "தமிழ்மொழி பெரிதும் இலக்கிய மொழியாகவே பயின்று வந்திருப்பதனால் அறிவியல் மொழிநடைக் கோட்பாட்டை நன்கு ஆராய்ந்து விளக்குவது தேவையாக அமைகிறது." என்று பொற்கோ அவர்களது "மொழிசார் சிந்தனைகள்" என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

  இறுதியாக, "தமிழ் கம்பியூட்டர்" போன்று பல துறைசார் இதழ்கள், குறிப்பாக பொறியியல், பௌதீகம், இலத்திரணியல் போன்ற துறைகளில் வெளி வந்தால், கலைச்சொல், தர்க்க மொழி அமைப்பு, அறிவியல் மொழி நடை தமிழில் வளர உதவும்.

  (அடுத்த பதிப்பு - May/14/04)

  Friday, April 30, 2004

  தமிழுக்கு ஆய்வு திறன் இல்லை

  "மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை பிரதிபலிக்கின்றது."

  "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்."
  ("The limits of my language mean the limits of my world.")

  லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)

  "மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம்."
  ("The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis)

  மேற்கூறிய கருத்துக்கள் உலகுக்கும், மொழிக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிகாட்டுகின்றன. மொழி சிந்தனையையும், சிந்தனை சமூகத்தையும் நெறிப்படுத்துகின்றன. இந் நிலையில் தமிழின் ஆய்வு திறன் நோக்கிய வினா முக்கியத்துவம் பெறுகின்றது. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ, சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது.

  தமிழுக்கு ஆய்வு திறன் இல்லையா? இல்லை போன்றே தோன்றுகின்றது.

 • தமிழில் ஒரு விஞ்ஞான ஆய்விதழ் இல்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்).

 • தமிழில் விஞ்ஞான ஆராச்சிகள் இல்லை, அல்லது அரிது.

 • கலைச் சொற்கள் உருவாக்குவத்தில், பாவிப்பதில் பல சிக்கல்கள்.


 • இக் கூற்றுக்களை நோக்கையில், தமிழுக்கு ஆய்வு திறன் இல்லை, அல்லது அத் திறனை வளர்ப்பது பெரும் சிக்கல். இந் நிலை தொடருமானால், தமிழை சமஸ்கிரதம் போல் ஒரு வரலாற்று சான்றாக அறிவித்து, அதன் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு முழுமையாக மொழிபெயர்த்து விட்டு, தமிழின் இயற்கை இறப்புக்கு வழி செய்வதே தமிழருடைய சிந்தனை, பொருளாதார, அரசியல் நலன்களுக்கு வலு சேர்க்கும்.

  இம்முடிவை தமிழ் அன்பர்கள் எதிர்ப்பார்கள். அதனால் என்ன? தமிழ் நாட்டில் இந்நிலையே உண்மையாகி வருகின்றது.

  தமிழுக்கு அப் பலம் இன்று இல்லை, நாளை வரும் என்றும், முன்னோருடைய உழைப்பு வீண் போயிரும் என்றும், தமிழை "பாதுகாப்பதிலும்" "வளர்ப்பதிலும்" ஈடுபட்டுள்ள பலர் உழைப்பு வீண் போயிரும் என்றும் சிலர் பைத்தியக்காரத்தனமாக தமிழை பற்றி இருப்பார்கள். (அவர்களில் நானும் ஒருவனா?)

  மேலே மறுத்திருந்தாலும், தமிழுக்கு ஆய்வு திறன் உண்டு, அத் திறனை விரைவாக விரிவாக்க வேண்டும். தமிழை ஆய்வு மொழியாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

  (அடுத்த பதிப்பில் (May/07/04): தமிழை ஆய்வு மொழியாக்க சில தீர்வுகள்)

  Tuesday, April 27, 2004

  இணையத்தில் இதழ்கள் தகவல்கள் - 2

  "ஈழத்து இதழியலின் வரலாறும் மதிப்பீடும்" பற்றி சமீபத்தில் ஒரு நூல் வெளிவந்து உள்ளது. இதை பற்றி ஒரு குறிப்பு ஈழநாதம் வலைப்பூவில் உண்டு.

  அ. மா. சாமி எழுதிய "தமிழ்க் கிற்ஸ்தவ இதழ்கள்-ஓர் ஆய்வு" பற்றிய நூல் விமர்சனம் www.biblelamp.org என்ற வலைத்தளத்தில், "Other Resources" என்ற சுட்டியின் கீழ் உண்டு.

  சிற்றிதழ்கள் பற்றி ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் மரத்தடி மேடையில் தந்த விளக்கத்தை இச் சுட்டி மூலம் படிக்கலாம்.

  பல்வேறு விதமான தமிழ் இதழ்கள் பற்றிய அலசல்களை கூகிள் -> குழுக்கள் சென்று "Tamil Magazines" போன்ற சொற்கள் மூலம் தேடி படிக்கலாம்.

  மற்றும், தமிழ் இதழ்கள் சார்ந்த பின்வரும் ஆங்கில கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

  "Abusing women: the pornographic intent of Tamil magazines"
  Manushi (Delhi) 62 (Jan-Feb 1991) 27-31

  "Construction of gender identity: women in popular Tamil magazines" by Wolf, Gita
  Economic and Political Weekly (Bombay) 26, no.43 (Oct 26 1991) WS71-WS73

  "Emotion, identity, and the female subject: Tamil women's magazines in colonial India, 1890-1940" by Sreenivas, Mytheli
  Journal of Women's History, V. 14, NO. 4, WINTER, pp. 59-82, 2003 ISSN: 1042-7961

  (அடுத்த பதிப்பில் (May/01/04) தமிழுக்கு ஆய்வு திறன் இல்லை - சிறு கட்டுரை)

  Tuesday, April 13, 2004

  இன்னுமொரு புரிதல்

  நான் நினைப்பவற்றையும் சிலர் கவனிக்கின்றார்கள், உற்ச்சாகம்மளிக்கின்றது, நன்றி சுந்தர்.

  அலசல்கழும் புரிதல்கழும் ஆங்கில மொழி துணையின்றி செய்தல் சிரமமென்று இருக்குமிடத்து, தமிழில் ஏன் துறைசார் இதழ்கள்?

  மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு பலகோணங்களில் ஆரயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாக கொண்டவர்கள், விஞ்ஞான-தொழில் நுட்ப்பங்களை தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில்(paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆரய வழி செய்கின்றது.

  மேலும் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் துறைசார் இதழ்கள் உதவும்.

  ரவி சீனிவாஸ் கருத்தான அறிவியல் படைப்புக்களுக்கு வாசகர் வரவேற்ப்பு குறைவு, ஆகையால் பயன் அற்றது என்பது ஏற்று கொள்ள கூடியதல்ல. துறைசார் படைப்புக்கள் ஐனரஞ்சக வாசகர்களை நோக்கி படைக்கப்படுவதிலை. துறைசார் இதழ்கள் விஞ்ஞான கருத்து பரிமாற்றத்துக்கும், வழிமுறைக்கும் (scientific method) அவசியம்.

  இன்றைய தமிழர் பண்டைய தேவாரத்தையோ, சங்க புகழ் பரணிகளையோ படித்து பொருள் அறிவதை விட தகவல் பரிமாற்றம், விஞ்ஞானம், தனி மனித வெளிப்பாடு ஆகியவற்றில் கூடிய ஈடுபாடு காட்டுகின்றனர். The Edgeல் குறிப்பிடப்பட்டுள்ளது போல, பழைய இலக்கியவாதிகள் பொருள் இழந்து வருகின்றனர். தமிழின் இப் புதிய பரிமானத்தை துறைசார் இதழ்கள் பிரதிபலிக்கும். மிகவும் வேகமாக வளரும் துறை, கணணி துறை, அத்துறையில் தமிழ் செழிக்கின்றது. மற்ற துறைகள் தேங்கி நிற்ப்பது ஏன்?

  தமிழின் வீச்சும், பேச்சும், மூச்சும் உயிர் பெறும் என்று, ஒவொரு துறையிலும் தமிழில் இணைய இதழ்கள் வலம் வரும்மிடத்தே. இந் நோக்கில், துறை சார் கூட்டு வலைப்பதிவுகள் மற்றும் போஸ்ட் நியூக் நல்ல செயல்திட்டங்கள். நான் தயார், நீங்கள்?

  (அடுத்த பதிப்பு-April/??/04)

  Wednesday, March 31, 2004

  இணையத்தில் இதழ்கள் தகவல்கள்

  முதலில் கல்யானசுந்தரம் அவர்களே அனேகமாக அவரது தமிழ் மின் நூலகத்தில் இணைய இதழ்கள் பற்றி தொகுத்திருப்பார். இன்று தமிழ் நாதம் தளத்திலும் விரிவான தொகுப்பு உண்டு. எனது தொகுப்பு இதழ்களின் இணையம்.

  தமிழம் ( www.thamizham.net) முக்கியமாக அச்சு தமிழ் இதழ்கழுக்காகவே இயங்கும் ஒரு தளம், மற்றும் இதழ். பொள்ளாச்சி நசன் அவர்களது 25 ஆண்டுக்கு மேற்ப்பட்ட பணியில் 2533 வகையான இதழ்களை சேகரித்துளார். அவற்றை பற்றிய தகவல்களை அழகாக பகிர்கிறார்.

  குரும்புசிட்டி திரு. இரா. கனகரத்தினம் அவர்கள் இலங்கையில் வருகின்ற இதழ்களை சேகரித்து உலக தமிழர் ஆவன காப்பகம் என நிறுவனமையப்படுத்தியுள்ளார். அவை பற்றி இணையம் மூலம் தரவும் செயல் திட்டங்கள் உண்டு.

  ரோஐர முத்தையா அவர்கள் பலவகையான தமிழ் புத்தகங்களை சேகரித்தவர். பல அரிய தமிழ் இதழ்கள் அதில் அட்ங்கும். அவருடைய அரிய செயற்பாட்டை ரோஐர முத்தையா ஆராட்ச்சி நூலகம் தொடர்கின்றது.

  எப்படி அச்சு இதழ்களை இலகுவாக மின் இதழ்கழாக மாற்றி இணையத்தில் பதிப்பிக்கலாம் என்பது ஒரு முக்கிய கேள்வி. அப்பார்னா மற்றும் சக்கரவர்த்தி, A Complete OCR System Development of Tamil Magazine Documents என்ற ஆய்வு கட்டுரையில் வழிமுறை ஒன்றை பகிர்கின்றார்கள்.

  (அடுத்த பதிப்பில்-April/15/04 இணையத்தில் இதழ்கள் பற்றி உள்ள கட்டுரை சுட்டிகள்)

  Wednesday, March 17, 2004

  இணைய தமிழ் இதழ்கள்

  இணையம் 1990 ஆண்டில் ரிம் பர்னர்ஸ் லி
  (Tim Berners - Lee) அவர்களால் உலகம் பரவிய வலையாக (world wide web) அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தில் தமிழ் 1995 ஆண்டில் கனியன் (www.kanian.com) வலையேற்றத்துடன் உலாவர ஆரம்பத்தித்து. இன்று ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட தரமான தமிழ் தளங்கள் உண்டு, இவற்றுள் தமிழ் இதழ்கள் (Tamil magZines) ஒரு சிறப்புமிக்க பகுதி.

  இணையத்தில் உள்ள தளங்களை பின்வருமாறு பிரிக்கலாம்:

  1. இணையம் புகு தளங்கள் (web portals)
  2. சங்கம் அல்ல அமைப்பு சார் தளங்கள்
  3. தனிப்பட்டோர் பக்கங்கள்
  4. தகவல் தளங்கள்/இணைய புத்தகங்கள்
  5. இணைய பொது சந்தி/குழுக்கள்
  6. தள தொகுப்புக்கள்
  7. வலைப்பூக்கள்
  8. செய்தி தளங்கள்
  9. இணைய இதழ்கள்

  அனைத்து தளங்களும் நேர்த்தியான பிரிவுகளுக்குள் அட்ங்குவது இல்லை. ஆயினும் தமிழ் இதழ்களை பின்வரும் இலக்கணம் கொண்டு வகைப்படுத்தலாம்.

  * இணையத்தின் இயல்புகளை உள்வாங்கிய வடிமைப்பு
  * (அச்சு இதழ்களின்) இணைய வழி பரிமாற்றம்
  * நேர்த்தியான காலவரைக்குள் வலையேற்றம்
  * பன்மையான எழுத்தாளர்களின் படைப்புக்கள்
  * சீரமைக்கப்பட்ட படைப்புக்கள்
  * பிரதானமாக செய்திகளை கொண்டுருக்காத தன்மை

  விரிவான, வகுக்கப்பட்ட தமிழ் இதழ்களின் தொகுப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆகையால் அப்படியான ஒரு தொகுப்பை நான் தொகுத்தேன். அத் தொகுப்பே இதழ்களின் இணையம். தமிழ் இதழ்களை தற்போது பின்வருமாறு பிரித்துள்ளேன்.

  நவீன இதழ்கள்
  கனடாவில் இருந்து
  சிரிக்க
  இலக்கியம்
  சமயம்

  தமிழ்த்துவம்
  பெண்களுக்கு
  இளையவர் இதழ்கள்
  ஈழம்-மாற்று பார்வைகள்
  ஈழம்-புலிகள்

  குறிக்கோளுடன்
  ஐனரஞ்சகம்
  சினிமா
  ஆங்கில தமிழ் சார் இதழ்கள்
  இனிவரும்
  மீண்டும் வருமா

  விஞ்ஞான்ம், தொழில்நுட்பம், மருத்துவம், தத்துவம், சட்டம்
  போன்ற துறைகளில் தனித்துவமான இணைய இதழ்கள் இல்லை. இது தமிழரின் பொது குறைப்பாட்டின் வெளிப்பாடே ஆகும். இணையம் மேலும் பல தமிழர்களை உள்வாங்குமிடத்தும், தொழில்ஙட்ப்ப சிக்கல்கள் (தமிழ் எழுத்து தரப்படுத்தல் சிக்கல், யுனிக்கோட் பிசகல், தட்டச்சு தடங்கல்கள்) நீங்கும்மிடத்தும் இணைய தமிழ் இதழ்கள் தரத்திலும் எண்ணிக்கையிலும் மேலும் வளரும்.

  என்ன இன்னும் அப்படியே இருக்கிறீர்கள், உங்களுக்காக 70 க்கும் மேற்ப்பட்ட இணைய இதழ்கள் காத்திருக்கின்றன, இங்கே இதழ்களின் இணையம்


  (அடுத்த பதிப்பு April 01, 2004)


  This page is powered by Blogger. Isn't yours?